திருநபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 – தமிழாக்கம்

Translation credit : Vinudeep R

திருநபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019

2019 சட்டம் எண் 40

[5 திசம்பர், 2019]

திருநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் அதனோடு தொடர்புடைய மற்றும் சார்புடைய பொருட்பாடுகளுக்கான சட்டம்

இந்திய குடியரசின் எழுபதாம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாக:-

தொகுதி 1

முகவுரை

 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம். – (1) இந்த சட்டம், திருநபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 என்று வழங்கப்பெறும்.

(2) இது, இந்தியா முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இது, மத்திய அரசு அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடும் அறிவிக்கையில் குறிக்கப்பட்ட நாளில் செயல்பாட்டுக்கு வரும்.

 1. வரையரைகள்.- இந்த சட்டத்தில், தறுவாயின் தேவை வேறானாலன்றி,

(அ) “உரிய அரசு” என்பது, –

(i) மத்திய அரசு அல்லது அதனிடம் முழுமையாகவோ கணிசமாகவோ நிதிபெற்ற நிறுவனங்களின் தொடர்பில் மத்திய அரசையும்;

(ii) மாநில அரசு அல்லது அதனிடமோ உள்ளாட்சி அமைப்புகளிடமோ, முழுமையாகவோ கணிசமாகவோ நிதிபெற்ற நிறுவனங்களின் தொடர்பில், மாநில அரசையும் குறிக்கும்;

(ஆ) “நிறுவனம்” என்பது –

(i) மத்திய அல்லது மாநில சட்டத்தால் நிறுவப்பெற்ற அமைப்பு அல்லது அரசுக்கோ உள்ளாட்சி அமைப்புக்கோ சொந்தமான அல்லது அவற்றால் கட்டுப்படுத்தப்படும் அல்லது அவற்றின் உதவிபெறும் அமைப்பு, அல்லது கம்பனி சட்டம், 2013ன் பிரிவு 2ன் கீழ் அரசு நிறுவனமாக வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவரற்றையும் அரசுத் துறையையும் குறிக்கும்; அல்லது

(ii) வணிக நிறுவனம் அல்லது குழுமம் அல்லது தனிநபர்களின் கூட்டமைப்பு, கூட்டுறவு அல்லது இதர சங்கம், நிறுமம், அறக்கட்டளை, முகமை ஆகியவற்றைக் குறிக்கும்;

(இ) “குடும்பம்” என்பது இரத்தபந்தத்தாலோ திருமணத்தாலோ சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட தத்தெடுப்பினாலோ சம்மந்தப்பட்ட நபர்களைக் குறிக்கும்;

(ஈ) “உள்ளீட்டுக் கல்வி” என்பது திருநபர் மாணவர்கள் ஒன்றாகவும் மற்ற மாணவர்களுடனும் பாகுபாடு, புறக்கணிப்பு, தொல்லை, மிரட்டல் ஆகியவற்றுக்கு பயப்படாமல், இதுபோன்ற மாணவர்களின் கற்றல் தேவைக்கேற்ப தகவமைக்கப்பட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைக் கொண்ட கல்வி முறையைக் குறிக்கும். 

(உ) “நிறுமம்” என்பது திருநபர்களை வரவேற்றல், பேணுதல், பாதுகாத்தல், கல்வி, பயிற்சி ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குதல் முதலிய சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுமத்தைக் குறிக்கும்;

(ஊ) “உள்ளாட்சி அமைப்பு” என்பது அவ்வவற்றின் ஆள்வரைக்குட்பட்ட இடங்களுக்கேற்ப மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அல்லது தற்சமயம் செயல்பாட்டில் உள்ள யாதொரு சட்டத்தால் உள்ளாட்சி அல்லது அடிப்படை தேவைகளை வழங்க உருவாக்கப்பட்ட அமைப்பைக் குறிக்கும்;

(எ) “தேசிய மன்றம்” என்பது பிரிவு 16-ன் கீழ் உருவாக்கப்பட்ட திருநபர்களுக்கான தேசிய மன்றத்தைக் குறிக்கும்;

(ஏ) “அறிவிக்கை” என்பது அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையைக் குறிக்கும்;

(ஐ) “இடைப்பாலினத்தவர்” என்பவர் பிறப்பிலேயே ஆண் அல்லது பெண் உடலுக்குறிய முதன்மை பால்பண்புகள், புற பாலுறுப்புகள், மரபுத்திரிகள் அல்லது ஹார்மோன்களிலிருந்து வேறுபாடு கொண்டவர்;

(ஒ) “வகுத்துரைக்கப்பட்ட” என்பது உரிய அரசால் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது எனப் பொருள்படும்;

(ஓ) “திருநபர்” என்பவர் தான் பிறந்த பாலிலிருந்து முரண்பட்டவராவர்; இச்சொல் திருநம்பிகள், திருநங்கைகள் (பால்மாற்று அறுவைசிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, லேசர் சிகிச்சை முதலிய சிகிச்சை பெற்றிருந்தாலும் இல்லையென்றாலும்), இடைப்பாலினத்தவர், வரையறுக்கபடா பாலினத்தவர் மற்றும் கின்னார், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜொக்டா ஆகிய சமூக அடையளம் கொண்டவர்களையும் குறிக்கும்.

தொகுதி 2

பாகுபாட்டிற்கு தடை

 1. பாகுபாட்டிற்கு தடை.– கீழ்கண்ட எந்த முகாந்திரத்திலும் யாதொரு நபரோ நிறுவனமோ திருநபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது:-

(அ) கல்வி நிறுவனங்களிலிலோ அவற்றால் வழங்கப்படும் சேவைகளிலோ புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(ஆ) பணி அல்லது தொழிலிலோ அதைச் சார்ந்தவற்றிலோ நியாயமற்ற முறையில் நடத்துதல்; 

(இ) வேலைவாய்ப்பு மறுத்தல் அல்லது பணிநீக்கம்;

(ஈ) மருத்துவ சேவைகள் புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(உ) பொதுமக்களுக்காக அர்பணிக்கப்பட்ட அல்லது பொதுமக்களுக்கு மரபாய் வழங்கப்படும் சேவைகள், தங்குமிடம், வசதி, சலுகை, பயன்பாடு, வாய்ப்பு, பொருட்களை பயன்படுத்தும் உரிமை ஆகியவற்றை வழங்கல், பெறுதல் ஆகியவற்றில் புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(ஊ) நடமாடும் உரிமையில் புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(எ) ஒரு சொத்தில் குடியிருத்தல், அதை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல், தங்குதல் முதலிய உரிமைகளில் புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(ஏ) அரசு அல்லது தனியார் பதவிகளில் பணியாற்றுதல் அல்லது அவற்றுக்கு போட்டியிடுதலில் புறக்கணிப்பு, நடுநிறுத்தல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்துதல்;

(ஐ) ஒரு திருநபரை அடைக்கலப்படுத்தியிருக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனத்திற்குள் அனுமதி மறுத்தல், அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுதல் அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்படுதல்.

தொகுதி 3

திருநபர் அடையாளத்திற்கான அங்கீகாரம்

 1. திருநபர் அடையாளத்திற்கான அங்கீகாரம்.– (1) இச்சட்டத்திற்குட்பட்டு, யாதொரு திருநபரும் தன்னை திருநபர் என அடையாளப்படுத்திக்கொள்ள உரிமை உடையவராவர். 

(2) உட்பிரிவு (1)-ன் கீழ் திருநபராக அங்கீகரிக்கப்பட்டவர் சுயபாலின அடையாளப்படுத்தலுக்கு உரிமையுடையவராவர். 

 1. அடையாள சான்றுக்கான விண்ணப்பம்.– ஒரு திருநபர், திருநபர் அடையாள சான்று பெற வகுத்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் முறையில், வகுத்துரைக்கப்பட்ட இணைப்பாவணங்களோடு மாவட்ட நிர்வாக நடுவரிடம் விண்ணப்பிக்கலாம்:

வரம்புரையாக: விண்ணப்பதாரர் இளவராயிருக்கும் பட்சத்தில், அவரது பெற்றோர் அல்லது காப்பாண்மையரோ விண்ணப்பிக்கவேண்டும். 

 1. அடையாள சான்று வழங்கல்.– (1) வகுத்துரைக்கப்பட்ட நடைமுறை, படிவம், முறை மற்றும் கால வரையறையை பின்பற்றி, பிரிவு 5-ன் கீழுள்ள விண்ணப்பதாரருக்கு மாவட்ட நிர்வாக நடுவர் திருநபருக்கான அடையாள சான்றை வழங்கவேண்டும்.

(2) ஒரு திருநபருக்கு உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழில் உள்ள பாலினம் அவரது எல்லா ஆவணங்களிலும் பதிவு செய்யப்படவேண்டும். 

(3) ஒரு நபருக்கு உட்பிரிவு (1)-ன் கீழ் வழங்கப்பட்ட அடையாள சான்று அவருக்கு திருநபர் அடையாள அங்கீகாரத்துக்கான ஆதாரமாகும்; அதற்குரிய உரிமைகளையும் அவருக்கு வழங்கும்.

 1. பாலின மாற்றம்.– (1) பிரிவு 6-ன் கீழ் அடையாள சான்று வழங்கப்பெற்ற ஒரு திருநபர், அவ்வடையாளச் சான்று வழங்கப்பட்ட பின்னர் பாலின மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டால், திருத்தம் செய்யப்பட்ட அடையாள சான்று பெற வகுக்குரைக்கப்பட்ட படிவம் மற்றும் முறையில் அவ்வறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடமிருந்து அச்சிகிச்சை பெற்றதற்கான சான்றையும் இணைத்து, மாவட்ட நிர்வாக நடுவரிடம் விண்ணப்பிக்கலாம்.

(2) மேற்படி விண்ணப்பத்துடன் மருத்துவ கண்காணிப்பாளர் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடமிருந்து அச்சிகிச்சை பெற்றதற்கான சான்று பெற்ற பின்னர், அச்சான்றின் உண்மைதன்மையை மாவட்ட நிர்வாக நடுவர் சரிபார்த்து திருப்தியடையும் பட்சத்தில், வகுத்துரைக்கப்பட்ட படிவம், முறை மற்றும் கால வரையறையை பின்பற்றி பாலின மாற்றம் குறிக்கப்பட்ட சான்றிதழை வழங்கவேண்டும்.

(3) பிரிவு 6-ன் கீழ் அடையாள சான்றோ, உட்பிரிவு (2)-ன் கீழ் திருத்தப்பட்ட அடையாள சான்று பெற்றவரோ தனது பிறப்பு சான்றிதழ் மற்றும் அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்களிலும் தங்கள் முதற்பெயரை மாற்றிக்கொள்ள உரிமையுடையவராவர்.

வரம்புரையாக: பாலின மாற்றமோ உட்பிரிவு (2)-ன் கீழ் திருத்தப்பட்ட அடையாள சான்றோ அத்திருநபர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை பாதிக்காது.

தொகுதி 4

அரசு மேற்கொள்ளும் நல்வாழ்வு நடவடிக்கைகள்

 1.  உரிய அரசின் பொறுப்பு.–  (1) சமூகத்தில் திருநபர்கள் முழுமையாகவும் பயனுறும் வகையிலும் கலந்துகொள்ளவும், அவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளவும் உரிய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

(2) திருநபர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும், அவர்களுக்காக உரிய அரசு மேற்கொள்ளும் நலத்திட்டங்களை அடைவதற்கும் ஏதுவாக வகுத்துரைத்தப்படி நலத்திட்டங்களை அவ்வரசு மேற்கொள்ளவேண்டும். 

(3) திருநபர்களைப் புறக்கணிக்காத, ஏளனத்திற்கு ஆளாக்காத, அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இல்லாத நிகழ்ச்சிகளையும் நலத்திட்டங்களையும் உரிய அரசு மேற்கொள்ள வேண்டும். 

(4) திருநபர்களை காப்பாற்றவும் பாதுகாக்கவும் மறுவாழ்வு அளிக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் உரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(5) திருநபர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் உரிமையை பாதுகாக்கவும் ஊக்கமளிக்கவும் உரிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

தொகுதி 5

நிறுவனங்கள் மற்றும் பிற நபர்களின் பொறுப்பு

 1. வேலைவாய்ப்பில் பாகுபாடின்மை.–  பணியமர்த்தல், பதவி உயர்வு உள்ளிட்ட வேலைவாய்ப்பின் எந்த ஒரு நிலையிலும் ஒரு திருநபருக்கு எதிராக யாதொரு நிறுவனமும் பாகுபாடு காட்டக்கூடாது
 2.  நிறுவனங்களின் பொறுப்பு.– இச்சட்டத்தின் வரைமுறைகளை பின்பற்றபடுவதை உறுதி செய்வதோடு, திருநபர்களுக்குரிய தேவைகளை அனைத்து நிறுவனங்களும் நிறைவேற்றவேண்டும்.
 3.  குறைதீர்க்கும் வழிமுறை.– இச்சட்டத்தை மீறியதாக வரும் குற்றச்சாட்டுகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள குற்றச்சாட்டு அலுவலர் ஒருவரை அனைத்து நிறுவனங்களும் நியமிக்கவேண்டும். 
 4.  வசிப்பிட உரிமை.– (1) இளவரின் நலனுக்காக, தகுதியுடைய நீதிமன்றத்தின் ஆணையின்றி எந்த ஒரு இளவரும் தன் பெற்றோரிடமிருந்தோ, நெருங்கிய குடும்பத்திடமிருந்தோ திருநபராக இருப்பதால் பிரிக்கப்படக்கூடாது

(2) எல்லா திருநபர்களுக்கும் –

(அ) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்பத்தினருடன் வசிக்கும் உரிமை உண்டு;

(ஆ) வீட்டிலிருந்தோ, அதன் ஒரு பகுதியிலிருந்தோ புறக்கணிக்கப்படாமலிருக்கும் உரிமை உண்டு;

(இ) அவ்வீட்டிலுள்ள வசதிகளை பாகுபாடின்றி அனுபவிக்கும் உரிமை உண்டு;

(3) பெற்றோரோ நெருங்கிய குடும்ப உறுப்பினரோ ஒரு திருநபரைப் பார்த்துக்கொள்ள இயலாத சூழலில், தகுதியுடைய நீதிமன்றம் அந்நபரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உத்தரவிடவேண்டும்.

தொகுதி 6

திருநபர்களுக்கான கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்

 1. கல்வி நிறுமங்கள் திருநபர்களுக்கு உள்ளீட்டுக் கல்வி அளிக்கும் பொறுப்பு.– உரிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அதனிடமிருந்து நிதி பெறும் அனைத்து கல்வி நிறுமங்களும் திருநபர்களுக்கு பாகுபாடில்லாத, பிறருக்கு ஈடான முறையில் உள்ளீட்டுக் கல்வியும் விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான சம வாய்ப்பும் அளிக்க வேண்டும்.
 2.  தொழிற்பயிற்சியும் சுயவேலைவாய்ப்பும்.– தொழிற்பயிற்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வாழ்வாதரத்தை திருநபர்கள் பெறுவதற்கு உதவியாகவும் அதை எளிமையாக்கவும் உரிய அரசு நலத்திட்டங்களை தீட்டவேண்டும். 
 3.  சுகாதார வசதிகள்.– திருநபர்களுக்காக உரிய அரசு கீழ்கண்டவற்றை மேற்கொள்ள வேண்டும் –

(அ) தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பின் வழிகாட்டுதலின்படி அந்நபர்கள் நச்சுயிரி கண்காணிப்பு செய்துகொள்வதற்காக, மனித ஏமகுறைப்பு நச்சுயிரி (HIV) கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்துதல்;

(ஆ) ஹார்மோன் சிகிச்சை மற்றும் பாலின மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல்;

(இ) ஹார்மோன் சிகிச்சை மற்றும் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் மனநல ஆலோசனை;

(ஈ) திருநபர் சுகாதாரத்துக்கான உலக தொழில் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கான சுகாதார கையேடு வெளியிடுதல்;

(உ) அவர்களுக்கு மட்டுமே இருக்கும் சுகாதார பிரச்னைகளை சீர்செய்ய மருத்துவ ஆராய்ச்சியும் மருத்துவ கல்வியமைப்பில் மறுஆய்வும் மேற்கொள்ளுதல்;

(ஊ) திருநபர்கள் மருத்துவமனைகளுக்கும், சுகாதார நிறுமங்களுக்கும் நிலையங்களுக்கும் செல்லுவதை எளிமையாக்குதல்;

(எ) ஹார்மோன் சிகிச்சை, பாலின மாற்று அறுவைசிகிச்சை, லேசர் சிகிச்சை உள்ளிட்ட திருநபர்களுக்கான இதர சிகிச்சைகளின் செலவுகளுக்காக ஒரு முழுமையான காப்பீட்டு திட்டத்தை உருவாக்குதல்.

தொகுதி 7

திருநபர்களுக்கான தேசிய மன்றம்

 1.  திருநபர்களுக்கான தேசிய மன்றம்.– (1) இச்சட்டத்தால் வழங்கப்பெற்ற அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் செயல்படுத்த மத்திய அரசு அறிவிக்கையின் மூலம் திருநபர்களுக்கான தேசிய மன்றம் ஒன்றை அமைக்கவேண்டும்.

(2) தேசிய மன்றத்தின் உறுப்பினர்கள் –

(அ) சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் அமைச்சகத்தை பொறுப்பேற்கும் மத்திய அமைச்சர், தலைமையாளர், பதவிவழி;

(ஆ) சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தை பொறுப்பேற்கும் மத்திய இணை அமைச்சர், துணை-தலைமையாளர், பதவிவழி;

(இ) சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் இந்திய அரசின் செயலாளர், உறுப்பினர், பதவிவழி;

(ஈ) சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாடு, சிறுபான்மையினர் நலன், மனிதவள மேம்பாடு, கிராமபுற மேம்பாடு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சகங்களிலிருந்தும், சட்டம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் ஆகிய துறைகளிலிருந்தும் மாற்றத்துக்கான இந்தியா இயக்கத்துக்கான தேசிய நிறுமத்திலிருந்தும், இந்திய அரசின் இணை-செயலாளர் பதவிக்கும் குறைவில்லாத தலா பிரதிநிதி, உறுப்பினர், பதவிவழி;

(உ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றிலிருந்து இந்திய அரசின் இணை-செயலாளர் பதவிக்கும் குறைவில்லாத தலா பிரதிநிதி, உறுப்பினர், பதவிவழி;

(ஊ) திருநபர் சமூதாயத்திலிருந்து ஐவர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களிலிருந்து சுழற்சி முறையில் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒருவர், உறுப்பினர்கள்;

(எ) ஐந்து வல்லுநர்கள், திருநபர் நல்வாழ்வுக்காக பணிபுரியும் அரசுசாரா அமைப்புகளின் சார்பாக மத்திய அரசால் நியமிக்கப்படுவோர், உறுப்பினர்கள்; 

(ஏ) திருநபர்கள் நலனுக்கு பொறுப்பான சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் இந்திய அரசின் இணை-செயலாளர், உறுப்பினர் செயலாளர், பதவிவழி. 

 1.  தேசிய மன்றத்தின் செயல்பாடுகள்.– தேசிய மன்றம் கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் –

(அ) திருநபர்களுக்காக இயற்றப்படும் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள், செயல்திட்டங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்;

(ஆ) திருநபர்களின் சம உரிமைக்காகவும் முழு பங்கேற்புக்காகவும் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் செயல்திட்டங்களையும் கவனித்து மதிப்பீடு செய்தல்;

(இ) அரசுத் துறைகளும் பிற அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளும் திருநபர்கள் சார்ந்து நடத்தும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து திறனாய்வு செய்தல்;

(ஈ) திருநபர்களின் குறைகளைத் தீர்த்தல்;

(உ) மத்திய அரசு வகுத்துரைக்கும் இதர செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.

தொகுதி 8

குற்றங்களும் தண்டனைகளும்

 1.  குற்றங்களும் தண்டனைகளும்.– யாரேனும்,–

(அ) அரசு பொது பணிகளுக்காகக் கட்டாயமாக்கும் சேவையைத் தவிர ஒரு திருநபரை கட்டாயபணி அல்லது கொத்தடிமை முறையில் ஈடுபட கட்டாயப்படுத்தினாலோ தூண்டினாலோ;

(ஆ) சமூகத்தின் பிற உறுப்பினர்கள் பயன்படுத்தவும் சென்றுவரவும் உரிமை இருக்கும் ஒரு பொது இடத்திற்கு ஒரு திருநபரை அனுமதிக்க மறுத்தாலோ, தடைசெய்தாலோ, வழியுரிமை மறுத்தாலோ;

(இ) வீடு, கிராமம் அல்லது வசிப்பிடத்திலிருந்து ஒரு திருநபரை வெளியேற்றினாலோ, அவர் வெளியேற காரணமாக இருந்தாலோ;

(ஈ) உடல் சார்ந்தோ மனம் சார்ந்தோ ஒரு திருநபரின் உயிர், பாதுகாப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகிவற்றுக்கு ஊறு விளைவித்தாலோ, சேதம் ஏற்படுத்தினாலோ, குந்தகம் விளைவித்தாலோ, உடல், பாலியல், வார்த்தை, மனம் அல்லது பொருளியல் சார்ந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டாலோ,

அவருக்கு ஆறு மாதங்களுக்கும் குறையாமல் இரண்டு வருடங்களுக்கும் மிகாமல் சிறைதண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும். 

தொகுதி 9

இதர வழங்கல்கள்

 1. மத்திய அரசின் கொடை.– நாடாளுமன்றம், இதற்காக சட்டத்தால் தகுந்த ஒதுக்கீடு செய்த பிறகு, மத்திய அரசு தேசிய மன்றத்துக்கு இந்த சட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள தேவையான கொடையை அவ்வப்போது வழங்கவேண்டும்.
 2. இச்சட்டம் வேறெந்த சட்டத்துக்கும் எதிரிடையாக இல்லை.– தற்சமயம் செயல்பாட்டிலிருக்கும் யாதொரு சட்டத்துக்கும் இச்சட்டம் இணைப்பாக இருக்குமே ஒழிய எதிரிடையாக இராது. 
 3. நன்னம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு.– இச்சட்டம் அல்லது இதன்கீழ் இயற்றப்படும் விதிகளைப் பின்பற்றி நன்னம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அல்லது மேற்கொள்ளப்படவிருக்கும் எவற்றுக்கும் உரிய அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புக்கோ, அரசு அலுவலருக்கோ எதிராக யாதொரு வழக்கோ சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படக்கூடாது. 
 4. உரிய அரசுகள் விதிகளை இயற்றும் அதிகாரம்.– (1) முன்னறிவிப்பின் அடிப்படையில், அறிவிக்கையின் மூலம் உரிய அரசு, இச்சட்டத்தை செயல்படுத்த விதிகளை இயற்றலாம்.

(2) மேலளிக்கப்பட்டுள்ள பொது அதிகாரத்தை மட்டுப்படுத்தாமல், இந்த விதிகள் குறிப்பாக கீழ்குறிப்பிட்ட யாவற்றுக்காகவோ அனைத்துக்குமோ விதிகளை இயற்றலாம்:-

(அ) பிரிவு 5-ன் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் படிவம்;

(ஆ) பிரிவு 6 உட்பிரிவு (1)-ன் கீழ் அடையாள சான்று வழங்குவதற்கான நடைமுறை, படிவம், முறை மற்றும் கால வரையறை;

(இ) பிரிவு 7 உட்பிரிவு (1)-ன் விண்ணப்பிக்கும் முறை மற்றும் படிவம்;

(ஈ) பிரிவு 7 உட்பிரிவு (2)-ன் கீழ் திருத்தப்பட்ட அடையாள சான்று வழங்குவதற்கான படிவம், முறை மற்றும் கால வரையறை;

(உ) பிரிவு 8 உட்பிரிவு (2)-ன் கீழ் எடுக்க வேண்டிய நலத்திட்ட நடவடிக்கைகள்;

(ஊ) பிரிவு 10-ன் கீழ் வழங்கப்படவேண்டிய வசதிகள்;

(எ) பிரிவு 17-ன் கூறு (உ)-ன் கீழ் தேசிய மன்றத்தின் பிற செயல்பாடுகள்;

(ஐ) வகுத்துரைக்கப் படக்கூடிய அல்லது படவேண்டிய இதர பொருட்பாடுகள்.

(3) உட்பிரிவு (1)-ன் கீழ் மத்திய அரசு இயற்றும் அனைத்து விதிகளும் இயற்றப்பட்டவுடனேயே நாடாளுமன்றம் கூடியபோது அதன் இரு அவைகள் முன்னும் ஒரு கூட்டத்தொடருக்கோ இரு கூட்டத்தொடருக்கோ 30 நாட்களுக்கு வைக்கப்பட்டு, அவை பரிந்துரைக்கும் மாற்றங்களுடன் நடைமுறைக்கு வரும், அல்லது செயலிழக்கும்; ஆயினும், மாற்றம் செய்வதற்கு முன்னர் அந்த விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எந்த குந்தகமும் ஏற்படாது. 

(4) உட்பிரிவு (1)-ன் கீழ் மாநில அரசு இயற்றும் அனைத்து விதிகளும் இயற்றப்பட்டவுடனேயே சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்னோ, ஒரு அவை மட்டுமே இருக்கும் பட்சத்தில், அந்த அவையின் முன் வைக்கப்படவேண்டும். 

23. இடர்பாடுகளை நீக்கும் அதிகாரம்.– இச்சட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க, இச்சட்டத்துக்கு எதிராக எதுவுமில்லாமல் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியடப்பட்ட ஆணையின் மூலம் மத்திய அரசு சட்டமியற்றலாம்:

வரம்புரையாக: இச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு பின் மேற்படி ஆணை எதுவும் பிறப்பிக்கக்கூடாது.

(2) இப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் அனைத்தும் இயற்றப்பட்டவுன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்னும் வைக்கப்படவேண்டும். 

Leave a Reply